புத்துார் : பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதால், புத்துாரில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. புதிதாக பதிவாகும் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில், மின்சார வாகனங்கள் பயன்படுத்த, போக்குவரத்துத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே பலரும் மின்சார வாகனங்கள் வாங்க பிரியப்படுகின்றனர்.பெங்களூரு, மைசூரு உட்பட சில மாவட்டங்களை தொடர்ந்து, தட்சிண கன்னடாவின் புத்துாரிலும், மின்சா வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.இங்குள்ள போக்குவரத்துக்கழக அலுவலகத்தில், 461 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளது. 2020 க்கு முன் வெறும் 61 வாகனங்கள் பதிவானது. 2021 — 22ல், 400 வாகனங்கள் பதிவாகியுள்ளது. ஒரே ஆண்டில் மூன்றரை மடங்கு வாகன பதிவு அதிகரித்துள்ளது.மின்சார வாகன பயன்பாட்டை, அரசும் ஊக்கப்படுத்துகிறது. இத்தகைய வாகனங்களை பதிவு செய்யும் போது, சாலை பாதுகாப்பு வரி மட்டும் செலுத்தினால் போதும். பதிவு கட்டணம் உட்பட எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.மின்சார வாகனங்களுக்கு, ‘கிரீன் நம்பர்’ பிளேட் கிடைக்கும். எரிபொருள் தொகையை மிச்சப்படுத்துவதுடன், வரிச்சுமையையும் குறைக்கலாம். இந்த வாகனங்கள் பொது மக்களுக்கு வரப்பிரசாதம்.பலருக்கும் மின்சார வாகனம் வாங்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தாலும், சார்ஜிங் ஸ்டேஷன் பற்றாக்குறை உள்ளது. புத்துார் போக்குவரத்துக்கழக எல்லையில், எலக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் இல்லை. வீட்டிலேயே சார்ஜிங் செய்ய வேண்டியுள்ளது. சார்ஜிங் மையங்கள் அமைத்தால், வாகனங்கள் மேலும் அதிகரிக்கும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
Advertisement