புதுடெல்லி: `முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்படுவது அவசரப்பட்டு எடுத்த முடிவாகும்,’ என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்று சரிந்து வருவவதால், கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஒன்றிய அரசு கடந்த மாதம் 31 முதல் ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் முகக்கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு முழு விலக்கு அளித்துள்ளன. இது குறித்து வைரஸ் நிபுணரான ஜேக்கப் ஜான் கூறுகையில், `இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து விட்டாலும், முகக்கவசம் அணியதில் இருந்து இவ்வளவு விரைவாக விலக்கு அளித்திருக்க கூடாது. இது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாக உள்ளத. இருப்பினும், மக்கள் தாங்களாக முன்வந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தால், வைரஸ்களிடம் இருந்து தற்காத்து கொள்ள முடியும்,’ என்று தெரிவித்தார்.இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “உலகம் முழுவதும் ஒமிக்ரான் அலையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருப்பினும், இந்தியாவில் பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. தடுப்பூசியின் உதவியினால் இந்தியா ஒமிக்ரான் அலையை எளிதாக சமாளித்தது,’ என்று கூறினார்.