இடம் சம்பந்தமான சிவில் பிரச்னையில் மாற்றுத்திறனாளி பெண்ணையும் அவர் தாயையும் வீடு புகுந்து தாக்கிய வழக்கில், குற்றவாளிகளான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ்காரர்களை காப்பாற்றி வழக்கை முடித்த மானாமதுரை டி.எஸ்.பி. சுந்தர மாணிக்கத்தை கடுமையாகக் கண்டித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேலகரையை சேர்ந்த நாகலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மாற்றுத்திறனாளியான நான் தாயுடன் வசித்து வருகிறேன். எங்களுக்கும் வீரமணி என்பவர் குடும்பத்துக்கும் நிலப் பிரச்னை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது.
அவர்கள் கொடுத்த புகாரில் மானாமதுரை இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் என்பவர் போலீஸ் படையுடன் வந்து எங்களை வீட்டை விட்டு வெளியேறவும், என் தாயாரை வெற்றுத்தாளில் கையெழுத்திடவும் சொல்லி மிரட்டினார். ஒத்துக்கொள்ளாததால் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் சட்டவிரோத காவலில் வைத்தனர்.
இது சம்பந்தமாக சிவகங்கை எஸ்.பி.யிடம் புகார் அளித்தோம். அவர் மானாமதுரை டி.எஸ்.பியை விசாரிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போலீஸுடன் வந்து எங்கள் இடத்தில் கற்களை குவித்தார். இதை எதிர்த்துக் கேட்டபோது என்னையும் என் தாயையும் கடுமையாகத் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த நாங்கள் மானாமதுரையிலும், பின்பு சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்தோம். எங்கள் புகாரின் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி இளந்திரையன், “மனுதாரர் மற்றும் அவர் தாயார் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த போட்டோ ஆதாரங்கள் இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. மனுதாரார் சமர்பித்த மருத்துவமனை ஆவணங்கள் போலீஸாரின் அராஜகத்தை தெளிவுபடுத்துகின்றன.
மனுதாரரின் புகாரை நியாயமாக விசாரிக்காமல் அராஜகமாக மானாமதுரை இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி செயல்பட்டுள்ளனர்.
எந்தத் தவறும் செய்யாத நிலையில் மனுதாரரையும் அவர் தாயாரையும் போலீஸ் கடுமையாக தாக்கியுள்ளது. டி.எஸ்.பியின் செயலுக்கு இந்நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. மானாமதுரை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சிவகங்கை எஸ்.பி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், 12 வாரத்தில் வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கடுமையாக உத்தரவிட்டார்.
மானாமதுரை வட்டார காவல் நிலையங்கள் அனைத்திலும் இதுபோல அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவதும், பொய் வழக்குப் போடுவதும், தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து செய்வதும் எனத் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் திருப்புவனம் அருகே சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த ஜோடி மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலம் நாட, அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று இரண்டு தரப்பையும் அழைத்து மகளிர் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினார்கள். ஆனால், ஊரிலுள்ள ஆதிக்க ஜாதியினர் அப்பெண்ணின் தந்தையை ஊர் பஞ்சாயத்துக்கு அழைத்து, ‘பணம் தருவோம், உன் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்தி, அவர்கள் அனைவரின் முன்னாலும் அவரை கும்பிட்டு விழவைத்த சம்பவம் வெளியில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரம் மாணிக்கம் மீது அப்போதும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் சிவகங்கை எஸ்.பி. கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ஊர்காரர்கள் 58 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரம் மாணிக்கம் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் விஜயகுமார் என்பவர், தன்னை அவர் வீட்டை காலி செய்யச் சொல்லி டார்ச்சர் செய்வதாக ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மானாமதுரை டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிவகங்கை எஸ்.பி விசாரணை நடத்தி வருகிறார்.