மகளை கேடயமாக்கி பணம் பறிப்பு மனைவி மீது 'தாடி' பாலாஜி புகார்
சென்னை: 'என் மகளை கேடயமாக பயன்படுத்தி, பணம் பறிக்க முயற்சிக்கும் மனைவியிடம் இருந்து, குழந்தையை மீட்டுத் தாருங்கள்' என, நடிகர் 'தாடி' பாலாஜி புகார் அளித்துள்ளார்.
சினிமா மற்றும் 'டிவி' சீரியல்களில் நடித்து வருபவர் தாடி பாலாஜி, 44. அவர், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், அளித்துள்ள புகார்: நானும், நித்யா என்பவரும் காதலித்து, 2008ல் திருமணம் செய்தோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
எங்களுக்கு, 12 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல் பிரிந்து, தனியாக வசித்து வருகிறோம். மனைவியின் பராமரிப்பில் மகள் உள்ளார். என் மகளின் எதிர்காலம் கருதி, அவருக்கு தேவையான எல்லா விதமான செலவுகளையும் நானே செய்து வருகிறேன்; அது என் கடமை. என் மகள் நன்றாக படிப்பார். தற்போது, என் மனைவியின் தவறான வழிகாட்டுதல் காரணமாக, பள்ளிக்கு சரியாக செல்வது இல்லை என தெரிய வருகிறது.
எனக்கு எதிராக மகளை பேசச் சொல்லி, சமூக வலைதளத்தில், 'வீடியோ'க்களை நித்யா வெளியிட்டு வருகிறார்; இவற்றை உடனடியாக நீக்க வேண்டும். என் மகளின் மனதை கெடுத்து, மற்ற குழந்தைகள் மத்தியில், என் மகளை இழிவாக பார்க்கும்படி செய்து வருகிறார்.'உன் தந்தை மோசமான நபர்' என சொல்லிக் கொடுத்து, என் மகளுக்கு மனச்சிதைவு ஏற்படும் அளவுக்கு, பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கிறார்.
என் மகளை கேடயமாக பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்டு, நித்யா மிரட்டுகிறார். வெளிநாடு சென்று வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு தடையாக உள்ள என் மகளை ஆசிரமத்தில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளார். வெளிநாட்டு பயணம், பண மோகத்தால், என் மகளை மன நோயாளியாக ஆக்கி விடுவாரோ என அஞ்சுகிறேன். இதை, என்னால் நேரடியாக தடுக்க முடியவில்லை. ஆணையம் தலையிட்டு, என் மகளை மீட்டுத் தர வேண்டும். என் மனைவிக்கு விவாகரத்து கொடுப்பதில், எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. எனக்கு என் மகளின் எதிர்காலம்தான் முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.