மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா பொருட்காட்சி ஏற்பாடுகளுக்கு இன்னும் டெண்டர் விடப்படாததால், திட்டமிடப்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நாட்களில் பொருட்காட்சி நடப்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா நாட்களில் தமுக்கம் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரங்குகள் அமைத்து சித்திரைப் பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.45.5 கோடியில் வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. அதனால், தமுக்கம் மைதானத்தில் போதுமான இடவசதியில்லாததால் மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தாவணி அருகே உள்ள 10 ஏக்கர் நிலத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடத்த செய்தி மக்கள் தொடர்பு துறை முடிவு செய்திருந்தனர். அதற்கு மதுரை அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு எக்காரணம் கொண்டும் தமுக்கத்தில் பொருட்காட்சி நடத்தக் கூடாது என்றனர். அதனால், மீண்டும் தமுக்கத்திலே சித்திரைப் பொருட்காட்சியை நடத்துவதற்கு செய்தி மக்கள் தொடர்பு துறை முடிவு செய்தனர்.
ஆனால், சித்திரைத் திருவிழா வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வா்கள். அதனால், சித்திரைத் திருவிழா தொடங்கிய சில நாட்களிலே தமுக்கம் மைதானத்தில் கடந்த காலத்தில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தற்போது சித்திரைத் திருவிழாவு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கவில்லை. பொருட்காட்சிக்கான அரங்கு அமைப்புகள் , உணவுப் பொருட்கள் விற்பனை, ராட்டினம் உள்ளிட்டவற்றை இதுவரை டெண்டர் விடப்படவில்லை. அதனால், திட்டமிட்டப்படி பொருட்காட்சி தொடங்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெண்டர் விடுவதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டம் அதிகளவு திரள்கிற அளவிற்கு தமுக்கம் மைதானத்தில் போதுமான வசதியில்லை. அதிகளவு கூட்டம் திரண்டால் நெரிசல் ஏற்படும். அதனால், சித்திரைத் திருவிழா முடிந்தபிறகே பொருட்காட்சியை நடத்தலமா என்ற திட்டமும் இருக்கிறது. இல்லையென்றால் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாட்களில் பொருட்காட்சி தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.