தமிழக அரசின் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மணிலா செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி அநீதியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணத்தை தெரிவிக்கும்போது ஒன்றிய அரசு உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பானது அநியாயமானது மட்டுமின்றி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளில் தலையிடுவதாகும்.
ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டுமே தவிர, அதற்காக சொத்து வரியை உயர்த்த வேண்டுமென முன் நிபந்தனை விதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
ஒன்றிய அரசின் இந்த அதிகார வரம்பு மீறிய செயலை மாநில அரசு கண்டிப்பதற்கு மாறாக அதனை செயல்படுத்த முன்வந்திருப்பதும், அதன்மூலம் மக்களின் வரிச்சுமையை அதிகரிப்பதும் ஏற்க இயலாததாகும்.
தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78ன் படி அனைத்து வரிகளையும் தீர்மானிககும் அதிகாரம் அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அம்மன்றங்களுக்கு சம்மந்தமில்லாமல் மாநில அரசே சொத்து வரி விகிதங்களை உயர்த்தி தீர்மானித்திருப்பது உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை மதிக்காத செயல் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அரசு ஆணை பிறப்பித்த பிறகு மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற கூறியிருப்பது கண்துடைப்பாகும்.
மேலும், தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920, பிரிவு 81ஏ-ன் படி ஆளுநர் மூலம் சொத்து வரி விகிதாச்சாரங்களை உயர்த்தி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட விதியின்படி சொத்து வரி விகிதாச்சாரத்தை தீர்மானிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி விகிதாச்சார உயர்வின்படி 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகிதமும், 601-1200 சதுர அடி வரை உள்ள பரப்பு உள்ள கட்டிடங்களுக்கு 50 சதவிகிதமும், 1201-1800 சதுர அடி வரை பரப்பு உள்ள கட்டிடங்களுக்கு 75 சதவிகிதமும், 1800க்கு மேல் 100 சதவிகிதம் எனவும், இதுபோல வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் சொத்து வரி உயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீள முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தி கொண்டுள்ளது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழை நடுத்தர மக்கள் தலையில் மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளது வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.
எனவே தமிழக அரசு, அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி விகிதாச்சார உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து தமிழக மக்களின் தலையில் சுமைகளை ஏற்றுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.