சென்னை:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு விதித்த நிபந்தனையின் காரணமாகவே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளதாகவும், தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு திடீர் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை 150% வரை அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று தாக்குதலினால் தொழில்கள் நலிவுற்றும், மக்கள் வருமானம் குறைந்தும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் குடியிருப்புக்கான சொத்துவரியை 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது
கடந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வை எதிர்த்து குரல் எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சியை விட இரு மடங்கு அதிக வரி விதிப்பது எப்படி நியாயம்.
திடீரென உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து, மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் அமைச்சர் கே.என்.நேரு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு சொல்லித்தான் நாங்கள் வரியை உயர்த்தினோம் என பொய்யாக குறிப்பிடுகிறார்.
தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்தி விட்டு மக்களை சந்திக்க மனத்துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது பொய்யான புகார் தெரிவித்து, நடந்த சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.