புதுடெல்லி: கடந்த 1990க்குப் பிறகு மாநிலங்களவையில் 100 எம்பிக்களை கொண்ட முதல் கட்சி என்ற சாதனையை பாஜ படைத்துள்ளது. பஞ்சாப் உட்பட 6 மாநிலங்களில் 13 மாநிலங்களவை எம்பி.க்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பஞ்சாப்பில் 5 இடங்களையும் ஆம் ஆத்மி வென்றது. அதே நேரம், அசாம், திரிபுரா, நாகலாந்தில் தலா ஒரு இடங்களை பாஜ வென்றது. இமாச்சலில் ஒரு எம்பி இடத்தை பாஜ போட்டியின்றி கைப்பற்றியது.இதன் மூலம், மாநிலங்களவையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 100 எம்பி.க்களை கொண்ட கட்சி என்ற சாதனையை பாஜ படைக்க உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பட்டியல் மாநிலங்களவை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதும் பாஜ.வின் சாதனை அதிகாரப்பூர்வமாகும். தற்போது அக்கட்சிக்கு மாநிலங்களவையில் 97 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, மக்களவையில் பெரும்பான்மை பலத்தை பெற்ற நிலையில், 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையிலும் பாஜ தொடர்ந்து பலமடைந்து வருகிறது. கடந்த 2014ல் மாநிலங்களவையில் பாஜவின் பலம் 55 ஆக இருந்தது. பின்னர், பல மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் அதன் பலம் அதிகரித்து தற்போது 100 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடைசியாக 1990ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 எம்பிக்களை கொண்டிருந்தது. ஆனால், அதே ஆண்டில் அதன் எண்ணிக்கை 99 ஆக சரிந்தது. அதன்பின் 100 என்ற இலக்கு எட்டப்படாமலேயே இருந்தது.ரொம்ப நாள் நிலைக்காதுபாஜ.வின் 100 எம்பிக்கள் சாதனை அதிக நாள் நீடிக்காது என கூறப்படுகிறது. விரைவில் 52 இடங்களுக்கான மாநிலங்களவை எம்பி தேர்தல் நடக்க உள்ளது. அதில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், ஆந்திரா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜ.வுக்கு சரிவு ஏற்படலாம். உபி.யில் 11 இடங்களில் 8 இடங்களை பாஜ கைப்பற்றினால், 100 இலக்கை தக்க வைக்க வாய்ப்புண்டு.