புதுடெல்லி: மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜகவின் பலம் 97 ஆக இருக்கிறது. கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்களவையில் பாஜக பலம் 55-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து 97-ஆக உயர்ந்தது. இந்நிலையில் பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜக பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. நாகாலாந்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி. என்ற வரலாற்றுப் பெருமையை பாங்கனான் கோன்யாக் பெற்றுள்ளார்.
இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 14 இடங்களில் 13 இடங்களை பாஜகவும், ஒரு இடத்தை அதன் கூட்டணிக் கட்சியும் பிடித்துள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதன்முறையாக காங்கிரஸ் கட்சியோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றி பெற முடியாமல் போனது. கடைசியாக 1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸின் பலம் 99 ஆக குறைந்தது.