புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் கடுமையான வெயில் பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கடந்த மார்ச் மாதத்தில் வட, தென் இந்தியாவில் மழைப்பொழிவு இல்லாதது, அசாதாரண வெப்பத்திற்கு காரணமாகி உள்ளது. மார்ச் மாதம் நாடு முழுவதும் 8.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது நீண்ட கால சராசரி மழை அளவான 30.4 மிமீ விட 71 சதவீதம் குறைவாகும். இதற்கு முன், 1909ல் 7.2 மிமீ, 1908ல் 8.7 மிமீ மழை பதிவானது. அதே போல், மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 33.10 டிகிரி செல்சியஸ். இதுவும் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயிலாகும். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 33.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதே போல், கடந்த 122 ஆண்டில் இல்லாத அளவுக்கு நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20.24 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.