மிரிஹான ஜனாதிபதியின் வீட்டருகில் 31.03.2022 அன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் .அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளையே குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெளிவுபடுத்தினார்.
டொலர் மற்றும் மின்சார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியிடம் தீர்வில்லை. மக்களை ஏமாற்றுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இதுவொரு அடிப்படைவாத செயற்பாடு என்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பன நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தின. அதன் தாக்கமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணமாகும். நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதற்கிடையில் எதிர்க்கட்சியின் பங்களிப்புடன் பகிஷ்கரிப்பு நடவடிக்கையையும் சிலர் ஆரம்பித்துள்ளனர்.ஆட்சியை விரைவில் கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. டொலர் மின்சார நெருக்கடிகளுக்கு எதிர்க்கட்சியிடம் தீர்வு இல்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.