மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குமீது உக்ரைன் முதல்முறையானவான்வழித் தாக்குதல் நடத்திய தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை எதிர்த்து உக் ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் 37-வது நாளாக நேற்றும் நீடித்தது. உக்ரைனின் பல்வேறுபகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து 40 மைல்கள் தூரத்தில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது நேற்று முதல் முறையாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் எண்ணெய் கிடங்கு கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பெல்கோரோடு நகர கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தினார்.
மேலும், குறைந்த உயரத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் யாரும்கொல்லப்படவில்லை என்றும் கவர்னர் தெரிவித்தார். எனினும், உக்ரைனின் சார்பாக இந்த தாக்குதல் குறித்து எந்த உறுதியான தகவலும் வரவில்லை. ரஷ்யா எல்லைக்குள் உக்ரைன் தாக்கியதால், ரஷ்யாவின் தாக்குதல் மேலும் தீவிரமாகும் என கூறப்படுகிறது.