மாஸ்கோ: ரஷ்யா மீதுள்ள பொருளாதாரத் தடை நீங்கும்வரை ராஸ்காஸ்மாஸ்-ன் ஒத்துழைப்பு இருக்காது என ரஷ்ய வின்வெளி அமைப்பு தலைவர் டிமிட்ரி ரோகோஜின் நாசாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையம் உலகைச் சுற்றி வருகிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி மையமான ராஸ்காஸ்மாஸ் ஆகிய மையங்களின் மூலமாக இது செயல்படுகிறது.
விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள் எந்த நாட்டு விஞ்ஞானிகள் ஆக இருந்தாலும் இங்கு தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான கேப்ஸ்யூல், உடைகள், தங்கும் வசதிகள் இங்கு உள்ளன.
தற்போது உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் போர் புரிந்து வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு விண்வெளியிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை அடுத்து ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் அமைப்பின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது ராஸ்காஸ்மாஸ் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதார தடை ரஷ்ய மக்களை கொல்வதற்காகவே, இந்த தடைகள் நீக்கப்பட்டாலே ஒழிய சர்வதேச விண்வெளி அமைப்பில் ரஷ்யாவின் ஒத்துழைப்பு மற்ற உலக நாடுகளுக்கு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பூமியில் இவ்வளவு அமளி நடந்து கொண்டிருந்தபோதும் விண்வெளியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு அமெரிக்க மற்றும் 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் முன்னதாக கஜகஸ்தான் நாட்டில் பத்திரமாக தரை இறங்கினர்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ராஸ்காஸ்மாஸ் ஒத்துழைப்பு தங்களுக்குத் தேவையில்லை என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி முன்னதாக கடந்த மாதம் தகவல் வெளியிட்டது. இதேபோன்று நாசாவும் ராஸ்காஸ்மாஸ்-ஐ புறக்கணித்து எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ராஸ்காஸ்மாஸ் விண்வெளியில் பல நாடுகளால் ஒதுக்கப்படுவதை அடுத்து டிமிட்ரி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement