புதுடில்லி:இந்தியா – ஆஸ்திரேலியா இடையே வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள தீவு நாடு ஆஸ்திரேலியா. இந்நாட்டுடன், இந்தியா வரியற்ற பரஸ்பர வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஆஸி., வர்த்தகத் துறை அமைச்சர் டான் டெஹன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து பிரதமர் மோடி பேசுகையில் ”இந்த ஒப்பந்தம் இந்திய – ஆஸி., நல்லுறவில் புதிய அத்தியாயத்தை துவக்கும்,” என்றார். ”இந்தியா உடனான வர்த்தகத்திற்கு இந்த ஒப்பந்தம் மேலும் வலுசேர்க்கும்,” என, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்தார். ”இந்த ஒப்பந்தம் வாயிலாக, இந்தியா – ஆஸி., இடையிலான பரஸ்பர வர்த்தகம், 2 லட்சம் கோடியில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3.37 – 3.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்,” என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஜவுளி, ஆயத்த ஆடை, வேளாண் மற்றும் கடல் உணவுப் பொருட்கள், தோல், காலணிகள், ஆபரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவர். இப்பொருட்கள் ஏற்றுமதிக்கு ஆஸி., தற்போது 4 – 5 சதவீத சுங்க வரி விதிக்கிறது.
புதிய ஒப்பந்தம் காரணமாக இப்பொருட்களை வரியின்றி ஆஸி., இறக்குமதி செய்யும். அதுபோல, ஆஸி.,யின் மூலப்பொருட்கள், தாதுப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை, இந்தியாவில் வரியின்றி இறக்குமதி செய்யலாம்.
Advertisement