Hike in ATF prices: அரசுக்கு சொந்தமான எண்ணெய் சில்லறை விற்பனையாளர்கள் வெள்ளிக்கிழமை ஏழாவது முறையாக ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இப்போது டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் ஜெட் எரிபொருள் விலை ரூ.1,12,924.83 ஆக உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விமான கட்டணங்களின் உயர்வு எதிர்வரும் கோடைகால பயண சீசனில் நேரடியான தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட் எரிபொருள் விலை உயரக் காரணம் என்ன?
இரண்டு வாரங்களின் சர்வதேச விலையின் அடிப்படையில் ஜெட் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மற்றும் 16ம் தேதி அன்று திருத்தப்படும். கடந்த மாதம் சர்வதேச கச்சாப் பொருட்களின் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் ஒன்று 140 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படையாக அவை குறைந்தாலும் கூட பீப்பாய் ஒன்றின் விலை 100 டாலருக்கும் மேல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 16ம் தேதி அன்று முன்பு இருந்த விலையைக் காட்டிலும் 18% உயர்ந்து ரூ.1,10,666.29 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டியது அதுவே முதல்முறை.
விமான கட்டணத்தில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விமான நிறுவனங்களுக்கான செலவில் கிட்டத்தட்ட பாதியை ஈடுசெய்கிறது. ஏடிஎஃப் விலைகள் அதிகரிப்பு கோடை விடுமுறைக்கு முன்னதாக அதிக விமான கட்டணங்களாக மாறுவதற்கு வழி வகை செய்யும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒரு வருடத்தில் அதிகம் பேர் பயணம் செய்யும் காலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விமானக் கட்டணங்கள் இன்னும் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட விலை உச்சவரம்புகளைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன. கடந்த மாதத்தில், சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10-30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு எத்தனை முறை ஏ.டி.எஃப். விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
ஜெட் எரிபொருள் விலைகள் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 1 முதல் ஏழு முறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் , ATF விலைகள் கிலோ லிட்டருக்கு ரூ.38,902.42 வரை அதிகரித்துள்ளது.