வடசென்னையைச் சேர்ந்தவர் தேசப்பன். இவரின் சகோதரி சாந்தியின் கணவர் 2000-ல் இறந்து விட்டார். அதனால் தன்னுடைய ஒரு வயது மகளுடன் தேசப்பன் வீட்டில் சாந்தி தங்கினார். இந்த நிலையில் சாந்தி, தன்னுடைய மகளை தேசப்பனிடம் வளர்க்கும்படி கொடுத்துவிட்டு மறுமணம் செய்து கொண்டார். சகோதரியின் மகளை தேசப்பனும் அவரின் மனைவி ரேவதியும் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி வளர வளர தேசப்பனின் மனமாறியது. சிறுமி 9 வயதாக இருந்தபோது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு தேசப்பன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த வயதில் தாய்மாமனால் நடந்த கொடுமைகளை சிறுமியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சிறுமிக்கு ஒரளவு விவரம் தெரிந்த பிறகு தாய்மாமனால் தனக்கு நடக்கும் கொடுமைகளை உணர்ந்து அத்தையிடம் விவரத்தைக் கூறியுள்ளார். ஆனால் அத்தை ரேவதியோ, சிறுமியை கண்டித்திருக்கிறார்.
சிறுமி பருவமடைந்த பிறகு தேசப்பன், அவளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதில் சிறுமி, கர்ப்பமடைந்துள்ளார். இந்தத் தகவல் சிறுமியின் அம்மா சாந்தி, தேசப்பனின் மனைவி ரேவதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் தேசப்பனுக்கு ஆதரவாக செயல்பட்ட இருவரும் சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க உதவி செய்திருக்கின்றனர். இதையடுத்து தேசப்பனால் சிறுமி தினந்தோறும் பல்வேறு கொடுமைகளை சந்திக்கத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் தேசப்பனின் நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தனர்.
உதவி செய்ய யாரும் இல்லாததால் அபலை சிறுமி வீட்டை விட்டு கடந்த 2020-ம் ஆண்டு வெளியேறினாள். பிராட்வே பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமியை நல்உள்ளம் படைத்தவர்கள், குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமியை காப்பகம் ஒன்றில் தங்க வைத்தனர். அங்கிருந்த சிறுமி, தனக்கு சிறு வயது முதல் நடந்த பாலியல் தொல்லைகளை தன்னுடன் தங்கியிருந்த சிலரிடம் கூறியுள்ளார். அந்தத் தகவல் காப்பகத்தின் நிர்வாகி இசபெல் என்பவரின் சகோதரர் பென்னட் என்பவருக்கு தெரிந்ததும் அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இந்தத் தகவலை சிறுமி, காப்பக நிர்வாகி இசபெல் உட்பட காப்பகத்தில் அப்போதிருந்த நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் அதை மறைத்து விட்டனர்.
இந்த நிலையில் சிறுமி, காப்பகத்திலிருக்கும் தகவலைத் தெரிந்துக் கொண்ட அவரின் உறவினர்கள் அங்குச் சென்று சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகும் சிறுமிக்குப் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது. இதற்கிடையில் இசபெல், அவரின் சகோதரர் பென்னட் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் சிலர், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் இசபெல், அவரின் சகோதரர் பென்னட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்தபோது இசபெல் காப்பகத்திலிருந்த சிறுமிக்கு தற்போது 21 வயதாகுகிறது. அவள், தனக்கு சிறுவயது முதல் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து குழந்தைகள் நல கமிட்டியிடம் கூறினாள்.
உடனடியாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல கமிட்டி சார்பில் புகாரளிக்கப்பட்டது. சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யபாரதி மேற்பார்வையில், போலீஸார் விசாரணை நடத்தினர். இளம்பெண் அளித்த தகவலின்படி அவரின் மாமா தேசப்பன், அத்தை ரேவதி, அம்மா சாந்தி, தேசப்பனின் நண்பர்கள், அப்போதைய காப்பக நிர்வாகி இசபெல் உட்பட 12 பேர் மீது போக்சோ, கொலை மிரட்டல், கரு கலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக இளம்பெண்ணின் அம்மா, அத்தை, முன்னாள் காப்பக நிர்வாகி இசபெல் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “பாதிக்கப்பட்ட இளம்பெண் சிறுவயது முதல் பாலியல் கொடுமைகளை அனுபவித்து வந்திருப்பது தெரியவந்தது. அவளின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. மனதளவிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது அவளின் தாய்மாமன், ஆபாச படங்களைக் காண்பித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்தத் தகவல் சிறுமியின் அம்மா, அத்தைக்குத் தெரிந்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தேசப்பனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சிறுமிக்கு அவளின் அத்தை கொடூர தண்டனை ஒன்றையும் கொடுத்துள்ளார்.
சிறு வயதில் சிறுமி பாலியல் சித்ரவதைக்குள்ளான போது அதை அத்தையிடம் கூறியுள்ளார். அதைக்கேட்ட சிறுமியின் அத்தை, இந்த வயதிலேயே உனக்கு ஆண் துணை கேட்கிறதா என்று கூறி சிறுமியின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்க முடியாமல்தான் சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி காப்பகத்துக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவருக்கு தொல்லை தொடர்ந்துள்ளது. இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை, கவுன்சலிங் அளித்துள்ளோம். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.
இன்னொரு அதிர்ச்சி தகவல் ஒன்றையும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். “சிறுமியின் தாய்மாமன் தேசப்பனுக்கு குழந்தை இல்லை அதனால் சிறுமியை வளர்த்து அவள் மூலம் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள திட்டமிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதற்கு சிறுமியின் அத்தையும் உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் தொடர்பாக தேசப்பனிடம் விசாரணை நடத்தவுள்ளோம்” என்றார்.