122 ஆண்டுகளில் இல்லாதபடி மார்ச்சில் வெயில் வாட்டி வதைப்பு- இந்திய வானிலை இலாகா தகவல்

புனே:

பொதுவாக கோடை வெயில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகமாக இருக்கும். மே மாதம் வெயில் தாக்கம் உச்ச நிலையில் காணப்படும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் வெயில் இருந்தது.

இந்த வகையில் மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 1901-ம் ஆண்டுதான் மார்ச் மாதத்தில் வெயில் அதிகமாக இருந்தது. 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் வெயில் அதிகமாக இருந்துள்ளது.

மேலும் சராசரி வெயிலிலும் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத சராசரி வெயில் 91.56 டிகிரி ஆகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் மார்ச் மாதம் சராசரி வெயில் 91.41 டிகிரியாக இருந்தது.

வடமேற்கு இந்தியாவில் மிகவும் அதிகமான வெப்பமும், மத்திய இந்திய பகுதியில் அதற்கு அடுத்தபடியாக வெப்பம் அதிகமாக இருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ராஜேந்திர ஜெனா மணி கூறியதாவது:-

உலக அளவில்கடந்த 20 ஆண்டுகள் வெப்பமான வருடமாக உள்ளன. காலநிலை மாற்றம் கடுமையான வானிலை தீவிரத்தையும், கால அளவையும் பாதிக்கிறது. மார்ச் மாதத்தின் 2-வது பகுதியில் நாட்டின் பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. ஆனால் குறைந்த அளவு மழை பெய்தது.

71 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டது. 8.9 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. 1901-க்கு பிறகு இது 3-வது குறைவான பதிவாகும்.

டெல்லி, அரியானா மற்றும் வடக்கில் உள்ள மலை பகுதிகள் போன்ற இடங்களிலும் மார்ச் மாதத்தில் வழக்கத்தை விட அதிகமான வெயில் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.