வாஷிங்டன்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை புறக்கணித்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளபோதும், வட கொரியா தளராமல் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது உலக அரங்கை அதிர வைத்தது. இந்த ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, சோதனையுடன் தொடர்புடைய 5 வடகொரிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வடகொரிய ராக்கெட் தொழில் அமைச்சகம், அதன் துணை நிறுவனங்களான அன்சோன் கார்ப்பரேஷன், சன்னிசன் டிரேடிங் கார்ப்பரேஷன், ஹப்ஜாங்காங் டிரேடிங் கார்ப்பரேஷன் மற்றும் கொரியா ரூன்சன் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மீது பொருளாதார தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக அமெரிக்க நபர்கள், தடை செய்யயப்பட்டுள்ளவர்களுடன் எந்த தொடர்பு வைத்துக்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த 5 நிறுவனங்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.