‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ போன்ற படங்கள் வழியாக அறியப்பட்ட இயக்குனர் நெல்சன், விஜய்யுடன் இணைகிறார் என்ற செய்தி வெளியானது முதல் டிரெய்லர் வெளியாகும் இன்றைய நாள் வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு இரண்டு பாடல்கள் அந்தப் படத்தில் இருந்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்று ஆறு மணிக்கு வெளியாக இருக்கும் டிரெய்லர் இந்தியாவிலே முதன்முறையாக பிரீமியம் லார்ஜ் ஃபார்மெட் எனப்படும் PLF ஃபார்மெட்டில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அது என்ன பிரீமியம் லார்ஜ் ஃபார்மெட் (PLF)?
வழக்கமான பார்மெட்டுகள் போல இல்லாமல் Premium Large Format-களில் காட்சிகளின் துல்லியம், திரையில் படம் தெரியும் விகிதம், ஒளி – ஒலி கலவை எனப் படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக் கூடியதாக இருக்கும். IMAX காட்சி விகிதம் (Aspect Ratio) 1.89:1 என்றால் PLF விகிதமும் அதற்கு நிகரானதாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். இந்த பார்மெட்டில் உருவாகும் வீடியோ எல்லாவித ஸ்கிரீன்களுக்கும் ஏற்றாற்போல முழுமையாக எந்தவித அவுட்டர் இடைவெளியும் இன்றி திரையில் விரியும். அதாவது மேலும் கீழும் கறுப்பு நிற ஸ்ட்ரிப்கள் இடம்பெறாது. ஜூம் செய்யவும் தேவை இல்லை.
அது மட்டுமின்றி ‘பீஸ்ட்’ படத்தை IMAX-ன் சான்றிதழ் பெற்ற ரெட் ரேஞ்சர் மான்ஸ்ட்ரோ டிஜிட்டல் கேமராவில் படமாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ஹாலிவுட்டில் வெளியான ‘THE SUICIDE SQUAD’ படம் இந்த கேமராவில் எடுக்கப்பட்டதுதான். சீனாவிலும் பிரபலமான இந்த வகை ஃபார்மெட் இந்தியாவில் இப்போதுதான் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இதன் அவுட்-புட் எப்படி இருக்கப்போகிறது என்பது ஆறு மணிக்குத்தான் தெரியும்.