சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் அணிக்கு விரைவில் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு இதுவரை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் 131 ஓட்டங்கள் எடுத்து மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டியில் லக்னோ அணியுடன் 210 ஓட்டங்கள் என்ற மிக கடினமான இலக்கை வைத்தும் தோல்வியையே சந்தித்தது.
இந்த தோல்விக்கு சென்னை அணியின் பந்துவீச்சில் தரப்பில் உள்ள பலவீனங்களே காரணங்களாக பார்க்கப்படுகிறது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார்.மேலும் கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களும் போட்டியில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும் விதத்தில் தீபக் சஹார் மீண்டும் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தசைநார் கிழிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபக் சஹார் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவரது பிசியோதெரபிஸ்ட் தெரிவிக்கையில் தீபக் சஹாரின் உடல்நிலை நல்ல முறையில் முன்னேறி இருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடலில் முன்னேற்றம் இருந்தால் இன்னும் 2 வாரங்களுக்குள் அவர் மும்பைக்கு அனுப்பிவைக்க படுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிசியோதெரபிஸ்டின் கணிப்பின் படி வரும் ஏப்ரல் 25ம் தேதி சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.