பத்து போட்டிகளில், மூன்றாவது முறையாக ஒரு அணி தான் அடித்த ஸ்கோரை டிபெண்டு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க்து. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கமலேஷ் நாகர்கோட்டிக்குப் பதிலாக முஸ்தஃபீர் ரஹ்மானை தேர்வு செய்து சேஸ் செய்ய முடிவு எடுத்தது. குஜராத் டைட்டன்ஸில் யாதொரு மாற்றமும் இல்லை. அடுத்த போட்டியிலாவது டெல்லி அணிக்கு வார்னர், இங்கிடி களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.
GUJARAT TITANS XI: மேத்யூ வேட், ஷுப்மன் கில், விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, அபிநவ் மனோகர், ரஷீத் கான், வருண் ஆரோன், லோகி ஃபெர்குஸன், மொஹமது ஷமி
DELHI CAPITALS XI: ப்ருத்வி ஷா, டிம் செய்ஃப்ரெட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட், லதி யாதவ், ரோவ்மேன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தஃபீர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அஹமது
முஸ்தஃபீர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இருந்த இடத்தில் இருந்து அகஸ்மாத்தாய் குதித்து கீப்பரின் தலைக்கு மேல் பந்தை லாகவமாக திருப்ப நினைத்தார் மேத்யூ வேட். ஆனால் அதை பண்ட் எளிதாகப் பிடிக்க நாட் அவுட் என்றார் அம்பயர். ரிவ்யூ வரை சென்று முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்து குஜராத். பவர்ப்ளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது குஜராத்.
பவர்ப்ளே முடியும்வரை பொறுமையாகக் காத்திருந்த விஜய் ஷங்கர், முடிந்ததும் வந்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ஸ்வீட் ஷாட் அடிக்க முயற்சி செய்து, அது மிஸ்ஸாகி இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், ஷுப்மன் கில்லும் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினார்கள். ஓவருக்கு ஒரு பவுண்டரி நிச்சயம், இரண்டு பவுண்டரி லட்சியம் என முடிவெடுத்து ஆடியதால் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டே இருந்தது. 32 பந்துகளில் அரைசதம் கடந்தார் கில். 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த பவலின் கைகளில் பந்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் ஹர்திக்.
அதுவரையில் பவுண்டரிகளில் டீல் செய்துகொண்டிருந்த கில், கில்லர் மில்லர் வந்ததும் சிக்ஸர்களை விளாச ஆரம்பித்தார். அதுவும் அக்சர் படேலில் பந்தில் அடித்தது எல்லாம் 83 மீட்டர்கள் வரை சென்றது. இந்த நாளில் பட்லரைத் தொடர்ந்து, ஷுப்மன் கில்லும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன், ஐபிஎல் போட்டிகளில் கில் தன் அதிகபட்ச ஸ்கோராக 84 பந்துகளைப் பதிவு செய்தார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழ, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது குஜராத்.
குஜராத்துக்கு முதல் ஓவர் என்றால், டெல்லிக்கு இரண்டாவது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டனான ஹர்திக்கே பந்துவீச வந்தார். ‘என்னடா இது ட்விஸ்ட்’ என யோசித்தால், முதல் பந்திலேயே செய்ஃப்ரெட் அவுட். ஐந்தாவது ஓவரை வீச வந்தார் மீசைக்கார நண்பர் லோகி ஃபெர்குஸன். கடந்த போட்டியில் நல்ல துவக்கம் அளித்த பிருத்வி ஷாவை அவுட்டாக்கினார் லோகி. அதே ஒவரில் மந்தீப்பும் அவுட். கடந்த போட்டியில் 32 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த டெல்லி, இந்த முறை 34 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட்டும், லலித் யாதவும் சீரான இடைவெளியில் ரன்களைக் குவித்துக்கொண்டு வந்தனர். பத்து ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது டெல்லி. விக்கெட் இருப்பதால் எட்டக்கூடிய இலக்குதான் என்றாலும், ஓவருக்கு பத்து ரன்கள் தேவைப்பட்டன.
விஜய் ஷங்கர் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு, இன்னொரு பந்தை சிங்கிளுக்குத் தட்டினார் ரிஷப் பண்ட். சரியான கம்யூனிக்கேசன் இல்லாததால், பாதி தூரம் வந்த லலித் யாதவ் மீண்டும் நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு ஓடினார். விஜய் ஷங்கரோ பாலை வைத்து அடிப்பதற்கு முன்பாகவே காலை வைத்து ஸ்டம்பை உரசிவிட ஒரு பைல்ஸ் முன்னரே விழுந்துவிட்டது. அதன் பிறகு பந்தை வைத்து ஸ்டம்பில் அடித்து லலித் யாதவை அவுட் செய்தார்.
பவலும், பண்ட்டும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க மீண்டும் பந்துவீச வந்தார் லோகி. இந்த முறை முதல் பந்தில் அவுட்டானார் ரிஷப் பண்ட். செமயான ஃபீல்ட் செட்டப்புடன், மீண்டும் லோகியை பந்துவீச அழைத்தார் ஹர்திக் பாண்டியா. அந்த பந்தை எப்படி அடிப்பது என ஒரு கணம் யோசித்த பண்ட், தவறாக லெக் சைடில் அடிக்க, அதை எளிதாக கேட்ச் பிடித்தார் அபினவ். அதே ஓவரில் அக்சர் படேலும் இரண்டு பவுண்டரி அடித்துவிட்டு, கீப்பர் கேட்ச் முறையில் அவுட்டானார்.
கடைசி மூன்று ஓவர்களில் முப்பது ரன்கள் தேவை. பந்து வீச வந்தார் ஷமி. பவல் மற்றும் கலீல் அஹமதை அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி ஆட்டத்தினை குஜராத் வசப்படுத்தினார் அவர்.
நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லோகி ஃபெர்குஸன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ரன்களே போதாது என்கிற நிலையில் இருந்த கிரவுண்டில் 170 ரன்களை சேஸ் செய்யத் திணறியது டெல்லி. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது, டெல்லிக்கு இத்தொடரின் முதல் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது.