கொல்கத்தா: அசன்சோல் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக மற்றொரு நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பிரசாரம் செய்து வருவதால் மேற்குவங்கத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்ற பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனது கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் மற்றொரு பாலிவுட் நடிகரும், திரிணாமுல் கட்சி வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா (பாஜகவில் இருந்து விலகியவர்) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அங்கமித்ரா பால் போட்டியிடுகிறார். இதையடுத்து மிதுன் சக்ரவர்த்தி வெளியிட்ட வீடியோவில், ‘அசன்சோல் லோக்சபா தொகுதி வாக்காளர்கள் பாஜகவின் அங்கமித்ரா பாலுக்கு வாக்களிக்க வேண்டும்.அவர் சிறந்த வடிவமைப்பாளர், நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்; கொள்ளையடிக்க மாட்டார். தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக உழைப்பார். எப்போதும் உங்களுடன் நிற்பார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என்னால், அசன்சோலுக்கு பிரசாரம் செய்ய வரமுடியல்லை. மக்கள் பயப்பட வேண்டாம்; தைரியமாக அங்கமித்ரா பாலுக்கு வாக்களியுங்கள்’ என்று ஆதரவு திரட்டி உள்ளார். முன்னதாக பாலிகஞ்ச் சட்டசபை மற்றும் அசன்சோல் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, ஏப். 16ல் நடக்கிறது. பாஜக முன்னாள் தலைவர் பாபுல் சுப்ரியோ, அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் சேர்ந்துள்ளார். அதையடுத்து தனது எம்பி (அசன்சோல்) பதவியை ராஜினாமா செய்தார். அதனால், இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.