அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் ஆபத்து காங்கிரஸுக்கு ஏற்படலாம் எனத் தெரிகிறது.
மாநிலங்களவையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த காட்சிகள் தற்போது மாறியுள்ளன. மாநிலங்களவையில் 1990-களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 108 உறுப்பினர்கள் இருந்தனர். அதே காலகட்டத்தில் பாஜகவுக்கு உறுப்பினர்களாக 55 எம்.பி.க்கள் இருந்தனர். தற்போது இந்தநிலை தலைகீழாக மாறி, ஆளும் கட்சியான பாஜகவுக்கு 100 எம்.பி.க்கள், காங்கிரஸுக்கு வெறும் 33 எம்.பி.க்கள் என்றாகி விட்டது.
மாநிலங்களவையில் எதிர்க் கட்சியாக தொடரும் காங்கிரஸ் அதை தக்கவைத்துக் கொள்ள குறைந்தது 25 எம்.பி.க்களை கொண்டிருப்பது அவசியம்.
இந்நிலையில், மாநிலங்களவைக்கு உ.பி.யை சேர்ந்த 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த 11 புதிய எம்.பி.க்களுக்கான தேர்தல் வரும் ஜுலையில் நடைபெற உள்ளது. உ.பி. பேரவையில் காங்கிரஸ் 2, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு எம்எல்ஏவை மட்டுமே கொண்டுள்ளன.
பாஜகவுக்கு அதன் முந்தைய ஆட்சியை விட 50 குறைவாக, 275 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். என்றாலும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை முன்பைவிட மேலும் குறைந்துவிட்ட தால் பாஜகவே அதிக பலன் பெறும்.
உ.பி.யை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் 5 பேருக்கு தற்போது பதவிக்காலம் முடிகிறது.
பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை முன்பை விடகுறைந்தாலும் அக்கட்சிக்கு 9எம்.பி.க்கள் வரை தற்போது கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு 3 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அதனை அக்கட்சி மீண்டும் பெற்றுவிடும்.
கடந்த மார்ச் 10-ல் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததுடன் அக்கட்சி மேலும் சரிவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தற்போது வெறும் 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
எனவே, உத்தர பிரதேச மாநிலத்துக்கு பிறகு வரும் இதர மாநில, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸுக்கு மேலும் இழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக, மாநிலங்களவையில் மட்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தை வைத்திருக்கும் காங்கிரஸுக்கு சிக்கல் உருவாகும் சூழலும் தெரிகிறது. ஏற்கெனவே, இக்கட்சிக்கு கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்ச 10 சதவீதஎம்.பி.க்கள் கிடைக்காமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருப்பது நினைவுகூரத்தக்கது.