* முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்* தலைவர்கள் சிலை, பேராசிரியர் நூலகம், முரசொலி மாறன் அரங்கமும் திறக்கப்பட்டன* சோனியா, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்புபுதுடெல்லி: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தலைநகரில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் திரண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இருந்து நான்கு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 31ம் தேதி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்தார். பின்னர் ஏப்ரல் 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து தமிழக கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தார். அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். டெல்லியில் உள்ள நவீன வசதிகள் கொண்ட பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து டெல்லி தீனதயாள் உபாத்தியாயா மார்க் சாலையில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டிடத்தை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக இவ்விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மாலை 4.50 மணிக்கு வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து கட்டிடத்தின் முன் பகுதியில் இருந்த 45 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து கட்சி அலுவலக முகப்பில் இடதுபுறம் அமைக்கப்பட்டிருந்த மார்பளவு அண்ணா சிலையை அமைச்சர் துரைமுருகனும், வலது புறம் இருக்கும் மார்பளவு கலைஞர் சிலையை எம்பி டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர். கட்சியின் அலுவலகத்தை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து கட்டிடத்தின் கீழ் தள வளாகமான முரசொலி மாறன் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வெண்கல குத்துவிளக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலாவதாக ஏற்றினார். இதைத்தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர். முரசொலி மாறன் அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்ததற்காலிக மேடையில், சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள், எம்பிக்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 2வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சோனியா காந்தி, நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார். பின்னர் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனீர் விருந்து வழங்கினார். சோனியாகாந்தி உள்ளிட்ட வடமாநில தலைவர்கள், சொந்த வீட்டுக்கு வந்ததுபோல அமர்ந்து சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இதில் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அமர் பட்நாயக் எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபரூபா பொத்தர் எம்.பி, மற்றும் மகுவா மொய்த்ரா எம்.பி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, சிரோமணி அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் எம்.பி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், தெலுங்கு தேச எம்பிக்கள் ரவீந்திர குமார், ராம் மோகன் நாயுடு, ஜெயதேவ கல்லா, சமாஜ்வாதி எம்பி ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் எ.வ.வேலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் முதல்வர் பொன்னாடை அணிவித்தார். அதோடு தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா முடிந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னை திரும்பினார். திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு நூல்கள் வெளியீடு: மூன்றாவது தளத்தில் இருக்கும் நூலகத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நூல்களை வெளியிட்டார். கருணாநிதி – எ லைப் என்றொரு புத்தகத்தையும் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய ஒரு திராவிடனின் பயணம் என்ற நூலையும் முதல்வர் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக்கொண்டார்.