திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியை சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் அங்குள்ள அர்பன் வங்கியில் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
வீட்டை அடமானமாக வைத்து வாங்கிய லோனை அந்த குடும்பத்தினர் முழுமையாக கட்டவில்லை. இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவர்களின் வீட்டை நேற்று மாலை ஜப்தி செய்தனர்.
அப்போது வீட்டில் அந்த தொழிலாளியின் 2 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களை அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு வீட்டுக்கு சீல் வைத்து விட்டனர்.
இந்த தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள காங்கிரசார் அங்கு வந்தனர். அவர்கள் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தொழிலாளி தற்போது உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே லோன் கட்ட அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.
ஆனால் அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து காங்கிரசார் அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாத்யூ குழல்நாடனுக்கு தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ. மாத்யூ குழல்நாடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் வீட்டின் சீலை உடைத்து குழந்தைகளை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் போலீசார், பாங்கி அதிகாரிகள் தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் எனக்கூறிவிட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ. மாத்யூ குழல் நாடன், அதிகாரிகளுக்காக காத்திருந்தார். இரவு 8.30 மணி ஆனபின்பும் அதிகாரிகள் வர தாமதம் ஆனதால் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை எம்.எல்.ஏ. சுத்தியலால் உடைத்தார். பின்னர் அவர் குழந்தைகளை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
எம்.எல்.ஏ. வீட்டின் சீலை உடைத்த காட்சிகளை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.
இதுபற்றி எம்.எல்.ஏ. மாத்யூ குழல்நாடன் கூறியதாவது:-
அதிகாரிகள் வைத்த சீலை உடைத்ததால் ஏற்படும் எந்த பின்விளைவுகளையும் சட்டரீதியாக சந்திப்பேன்.இதற்காக பயந்துவிடப்போவதில்லை, என்றார்.