இடாநகர்: நாகலாந்தில் கடந்தாண்டு டிசம்பரில் பஸ்சில் சென்ற தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அசாம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த மாதம் 31ம் தேதி ஒன்றிய அரசு ரத்து செய்தது.இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், திரப் மாவட்டத்தில் உள்ள சாசா கிராமத்தில் மீன் பிடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 2 பேர் மீது பாதுகாப்பு படைகள் நேற்று திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பு படையின் இந்த செயல், பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.