சென்னை:
அ.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது. கட்சி ரீதியாக 75 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் கட்சி விதிகளின்படி அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தி முடித்திருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு, உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் கட்சி தேர்தலை தொடர்ந்து நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கிளை, வார்டுகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு, நகர வார்டு நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன ஆணை கடிதங்கள் தலைமை கழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 3-வது கட்டமாக 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் கடந்த வாரம் நடந்தன. இதற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு முறையாக தேர்தல் நடத்தப்பட்டன.
இதுவரையில் 3 கட்டமாக அமைப்பு தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு அடுத்த சில நாட்களில் தேர்தலை நடத்துவதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையர்கள் பட்டியல் தலைமை கழகத்தில் தயாராகி வருகிறது.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அந்த மாவட்டத்தைச் சாராத நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் பொறுப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதனால் அடுத்த கட்ட தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி கழக நிர்வாகிகள் தேர்தல் இன்னும் 2 கட்டங்களாகவும் அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் 3 கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடத்தி முடித்து விட்டு மே மாதம் இறுதியில் பொதுக்குழுவை கூட்டலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
புதிய அவைத் தலைவர் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு மேலும் உற்சாககத்துடன் கட்சி பணிகளை தொடர அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
கட்சிக்குள் புத்துணர்ச்சியை செலுத்துவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சந்திக்க வேண்டிய போராட்டங்கள், எதிர்ப்புகளை திறம்பட கையாள தலைவர்கள் உத்வேகம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் சில மாற்றங்கள் செய்து கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது.
மே மாதம் 2-வது வாரம் வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் மே இறுதியில் பொதுக்குழுவை கூட்டினால் வசதியாக இருக்கும் என்று கருதுகிறார்கள். வழக்கம் போல வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்திலேயே பொதுக் குழுவை நடத்தவும் ஆலோசித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்… எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்கள் கைது -இலங்கை கடற்படை நடவடிக்கை