உலகமே டிஜிட்டல் மயமாகியுள்ளது. எல்லோரும் கடல், மலை என பல எல்லைகளை கடந்து தொடர்பு கொள்ள உதவுகிறது தொழில்நுட்பம். அதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஸ்மார்ட்போன்கள்.
இத்தகைய சூழலில் சிம் கார்டுகள் இல்லாமல் இரண்டு விதமான நெட்வொர்க் இணைப்புகளை ஒரே இ-சிம்மில் பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 மூலம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MEP (மல்டிபிள் எனேபிள்ட் புரோஃபைல்ஸ்) என்ற அம்சத்தின் மூலம் இதை கூகுள் நிஜமாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமையை 2020 வாக்கில் கூகுள் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்.
மொபைல் போன்களின் இதயம் என சிம் கார்டுகளை சொல்லலாம். அதாவது தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள, குறுஞ்செய்தி அனுப்ப, இணைய இணைப்பு பெறவும் சிம் கார்டுகள் உதவுகின்றன. முதலில் ஸ்டாண்டர்ட் சிம் கார்டுகள் போன்களில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது மைக்ரோ சிம்மாக மாறியது. இப்போது நானோ சிம் கார்டுகள் ஸ்மார்ட்போன்களில் இடம் பிடித்துள்ளது. இப்படியாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக சிம் கார்டுகளுக்கான இடத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில உற்பத்தியாளர்கள் வழக்கமான சிம் கார்டுகளை விடை கொடுக்கும் நோக்கத்தில் இ-சிம் (Embedded சிம்) கார்டுகளை கொண்ட போன்களையும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. இருந்தாலும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இ-சிம் கார்டில் ஒரே ஒரு சிம் புரோஃபைலை மட்டுமே ஆக்டிவாக வைக்க முடியும். டியூயல் சப்போர்ட் இதில் இல்லை. தற்போது அதற்கு தான் கூகுள் தீர்வு கண்டுள்ளது.
கூகுளின் MEP அம்சத்தின் மூலம் ஒரே இ-சிம்மில் பல புரோஃபைலை ஆக்டிவாக வைத்துக் கொள்ள முடியும் என தொழில்நுட்ப வட்டாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுவதும் சாப்ட்வேர் அளவில் இருக்கும் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 13-இல் இது இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது. இது இரண்டு சிம் கார்டுகளை ஒரே போனில் பயன்படுத்தி வரும் பயனர்களிடம் வரவேற்பை பெறும் என தெரிகிறது. படிப்படியாக ஆப்பிள் மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களிலும் இது அறிமுகமாகும் என தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஆண்ட்ராய்டு 13-இன் முதல் டெவலப்பர் ப்ரிவியூ வெர்ஷன் அறிமுகமானது. தொடர்ந்து மார்ச் வாக்கில் இரண்டாவது டெவலப்பர் ப்ரிவியூ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.