திருப்பதி:
ஆந்திராவின் திருப்பதியில் பெண்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, பெண் ஓட்டுநர்களுக்கான “ஷீ ஆட்டோ ஸ்டாண்டுகள்” அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையால் திருப்பதி பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, இந்த ஆட்டோ ஸ்டாண்டுகளை அந்த தொகுதி எம்.எல்.ஏ. பூமன கருணாகர் ரெட்டி, நகர மேயர் ஸ்ரீஷா, நகர்ப்புற காவல்துறை கண்காணிப்பாளர் வேங்கட அப்பால நாயுடு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
RTC பேருந்து நிலையம், மகிளா பல்கலைக்கழகம் மற்றும் ரூயா மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் ஷீ ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. பூமன கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, ஆண்கள் ஆட்டோ ஸ்டாண்டை பெண் ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், மாநிலத்திலேயே முதல் முயற்சியாக, பெண் ஓட்டுநர்களுக்கான ஆட்டோ ஸ்டாண்டு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.