சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமூகத்தில் மதரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறி ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2001-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டிஐஜியை மிரட்டிய வழக்கிலும் யாசுதீன் தண்டிக்கப்பட்டார். இந்நிலையில், அண்ணா மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள்களின்போது, ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணைகளின் கீழ் யாசுதீனை முன்கூட்டியே விடுவிக்க கோரி அளித்த மனுவை நிராகரித்த அரசின் உத்தரவை எதிர்த்து அவரது தாய் ஜெய்தூன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட யாசுதீனை விடுதலை செய்தால் மதரீதியான பிரச்சினைகள் ஏற்படும். கைதியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ என்று விளக்கமளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
மேலும், இந்த வழக்கில் ஆயுள் கைதியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. விடுதலை செய்தால் மதரீதியான பிரச்னை ஏற்படும் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, யாசுதீனை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்துள்ளது’ எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, அரசு உத்தரவில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.