பெங்களூரை சேர்ந்தவர் நந்தன் குமார். இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் வலைத்தளத்தை முடக்கியுள்ளார். அது ஏன் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.
இதை கேட்கவே மிகவும் விந்தையாக இருக்கலாம். சம்பவத்தன்று அவர் பாட்னாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அந்த பயணத்தில் அவர் தனது பையை கொண்டு சென்றுள்ளார். அதே விமானத்தில் மற்றொரு பயணியும் வந்துள்ளார். அவர்கள் இருவரது பைகளும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. பயணம் முடிந்ததும் பைகளை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகு தனது பையை தவறவிட்டதை நந்தன் குமார் அறிந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புகார் கொடுத்துள்ளார். அவர்களும் விரைவில் அதற்கான தீர்வை கொடுப்பதாக சொல்லி உள்ளனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் தனது சிக்கலுக்கு தானே தீர்வு காண முயன்றுள்ளார் நந்தன்.
அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை அவர் ஹேக் செய்துள்ளார். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பயணியின் மொபைல் நம்பரை எடுத்து அவரை அணுகி பையை பெறலாம் என எண்ணி இப்படி செய்துள்ளார். அவரிடம் இருந்து பையில் அச்சாகி இருந்த பயணியின் பெயர் பதிவேட்டு (பி.என்.ஆர்) எண்ணைக் கொண்டு அந்த பயணியின் விவரங்களை சேகரித்துள்ளார். பின்னர் இருவரும் அவரவர் பைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இதனை ட்வீட் மூலம் அவர் விவரித்துள்ளார்.
பையை பெற வேண்டி நந்தன் இண்டிகோ வலைதளத்தை ஹேக் செய்திருந்தாலும் இணைய பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பி இருந்தது. அதே நேரத்தில் இண்டிகோ தங்களது வலைதளம் ஹேக் செய்யவே முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் பி.என்.ஆர் எண், பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி மாதிரியானவற்றை கொண்டு எந்தவொரு பயணியும் தங்களது பதிவு விவரங்களை பெற முடியும் என இண்டிகோ அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.