டெல்லியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று சாணக்யபுரியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், “பைடன் அரசே இந்தியாவைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்குதான் இந்தியா தேவை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி காவல்துறை பைடனுக்கு எதிராக இவ்வாறு போஸ்டர் ஒட்டியதற்காக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த பவன் குமார் என்பவரை நேற்று(சனிக்கிழமை) கைது செய்தது.
இதுகுறித்து பேசிய டெல்லி காவல்துறை துணை ஆணையர் அம்ருதா குகுலோத், “குற்றம்சாட்டப்பட்டுள்ள பவன் குமார், இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தாவுடன் அமெரிக்க தூதரகத்திற்கு வந்திருக்கிறார். அவர் குப்தா கூறியதால்தான் அந்த போஸ்டரை ஒட்டியிருக்கிறார். பின்னர் அதை சமூக ஊடகங்களில் குப்தா வெளியிட்டார். அவர் மீது இதுதொடர்பாக, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்து, சனிக்கிழமை அன்று கைது செய்தோம்” என்றார்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா, “எங்கள் அமைப்பின் மாநிலச் செயலர் பவன் குமார், தேசியத் துணைத் தலைவர் சுர்ஜித் யாதவ் ஆகியோரை காவல் நிலையத்தில் போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்து வைத்திருக்கின்றனர்” என்று பேட்டியளித்தார்.