இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும். கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள் உட்பட இன்று வழங்கப்பட்ட எரிபொருள் தொகுதியுடன் கடந்த 50 நாட்களுக்குள் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், அண்ணளவாக 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.
2. இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள், அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின்கீழ் தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பின் உறுதியான வெளிப்பாடாக இந்த எரிபொருள் விநியோகம் அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை வலுச்சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களும் குறித்த எரிபொருள் தொகுதிக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினை தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக மார்ச் 23ஆம் திகதி இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இலங்கைக்காக இந்தியா வழங்கும் கடன் வசதிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உதவிகள் ஆகியவற்றிற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்திருந்த அதேநேரம் எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா விசேட கவனத்தினை செலுத்துமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
3. 2022 பெப்ரவரி 02ஆம் திகதி பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவிற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் (எக்ஸிம் வங்கி) இலங்கை அரசாங்கமும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இலங்கை சார்பாக திறைசேரி செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்களும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி எக்ஸிம் வங்கியின் பிரதம பொது முகாமையாளர் திரு.கௌரவ் பண்டாரி அவர்களாலும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4. மேலும், இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அவசரமானதும் பிரத்தியேகமானதுமான கோரிக்கைக்கு அமைவாக உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் இந்த திட்டத்தின்கீழ் முதலாவது தொகுதி அரிசி வெகுவிரைவில் இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல, இவ்வருடத்தின் ஜனவரி முதல் பகுதியில் நாணய பரிமாற்ற கடனுதவியான 400 மில்லியன் அமெரிக்க டொலர், ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்திற்கான 515 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொடுப்பனவினை ஒத்திவைத்தல் உள்ளிட்ட நிதி உதவிகள் இந்தியாவால் வழங்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக, 2022 முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கான இந்தியாவின் ஆதரவானது 2.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5. இலங்கையின் அவசர தேவையினை கருத்தில்கொண்டு கடனுதவிகள் குறித்து துரிதமாக தீர்மானிப்பதற்கும் அவற்றினை அமுல்படுத்துவதற்கும் இந்தியா சிலவாரங்களுக்குள் கடுமையான உழைப்பினை மேற்கொண்டிருந்தது.
6. மேலும், இலங்கையில் துறைமுகம், புதுப்பிக்கத்தக்க சக்தி, உற்பத்தித்துறை போன்ற முக்கிய துறைகளில் மேம்படுத்தப்பட்ட இந்திய முதலீட்டினூடாக நடுத்தர காலம் முதல் நீண்ட காலம் வரையான ஆளுமை உருவாக்கத்திற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
02 ஏப்ரல் 2022