எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதுடெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்திடம் கடந்த 23-ம் தேதி தேசிய மீனவர் சங்கம் பொருளாளர் தோமர், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னதம்பி ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அதில், இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் நிர்வாணப்படுத்தப்பட்டும், கைவிலங்கு இடப்பட்டும் சித்ரவதை செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாவதாகத் தெரிவித்திருந்தனர். இந்திய மீனவர்கள் கைவிலங்குடன் இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்களையும் அவர்கள் தங்கள் புகாருடன் இணைத்திருந்தனர். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு இந்திய வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதையடுத்து இந்திய வெளியுறவுத்துறையும் விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆனால், வெளியுறவுத்துறையின் பதில் திருப்திகரமாக இல்லை என்று மனித உரிமைகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை போலீஸார் இந்திய மீனவர்களை கைவிலங்குடன் இழுத்துச் செல்லப்படும் வீடியோ தமிழக மீனவர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்திய மீனவர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல் குறித்த ஆதாரங்களுடன் கடல்சார் மக்கள் நலச் சங்கமம் சார்பில் பிரவீன்குமார் பரதவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மீண்டும் புகார் அளித்தார்.
இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்திய வெளியுறவுத்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணையத்தின் துணை பதிவாளர் தேபேந்திர குந்திரா இந்திய மீனவர்கள் மீதான மனித உரிமை மீறல் தொடர்வது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், இந்திய வெளியுறவுத் துறைக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.