ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில் இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். அந்த வகையில், இருசக்கர வாகனங்களில் பேரணி சென்ற இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கரௌலி நகர் வழியே சென்றபோது அவர்களுக்கும் அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கலவரம் வெடித்திருக்கிறது. நிலைமை மோசமானதால் அந்தப் பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று பேசிய ராஜஸ்தான் மாநில ஏ.டி.ஜி ஹவா சிங் குமாரியா, “இந்து புத்தாண்டை முன்னிட்டு இந்து மதம் சார்ந்த அமைப்பினர் இருசக்கர வாகனத்தில் பேரணியை நடத்தினர். அப்போது முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியான கரௌலி நகர் மசூதி அருகே இந்து அமைப்பினர் ஊர்வலமாக வந்தபோது, இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். பெரும் கலவரமாக மாறிய இந்தச் சம்பவத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கலவரத்தின் பதற்றம் காரணமாக கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த கலவரம் தொடர்பாக ராஜஸ்தான் டி.ஜி.பி-யிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், குற்றவாளிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, “நவ சம்வத்சரை முன்னிட்டு கரௌலியில் நடந்த பேரணியில் எதிர் மனப்பான்மை கொண்டவர்கள் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ராஜஸ்தானில் வெறுப்பு மனப்பான்மை வளர அனுமதிக்க முடியாது. குற்றவாளிகள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.