‘இந்து தமிழ் திசை’ நாளிதழை கடந்த 4 ஆண்டுகளாக பாடங்கள் வாரியாக தொகுத்து மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை, பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் செம்மைப்படுத்தி வருகிறார்.
நாளிதழ்களை வாசிப்பதுடன் கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், அதனை ‘கல்வி பெட்டகமாக’ பாதுகாத்து வருகிறார், திருவண்ணா மலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் ஆணைபோகி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன். அவரது 4 ஆண்டு கால முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். செய்தி களுடன் நிறுத்தி கொள்ளாமல், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை ‘இந்து தமிழ் திசை’ கொடுத்து வருகிறது என்கிறார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்து தமிழ் திசை நாளிதழில், கல்வி சார்ந்த கட்டுரைகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அதனை படித்துவிட்டு கடந்து செல்ல மனமில்லை. இதனால், நாளிதழில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் செய்திகளை பாடங்கள் வாரியாக தொகுத்து, மாணவர்களின் கல்வி மற்றும் பொது அறிவு வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என திட்டமிட்டு பணியை தொடங்கினேன். எனது 4 ஆண்டு கால முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, அரசியல், கரோனா ஆகிய தலைப்புகளில், இந்து தமிழ் திசை நாளிதழை தனித்தனி புத்தகமாக தொகுத்துள்ளேன். இதனை அடிப்படையாக கொண்டு கலந் துரையாடல் மூலமாக மாணவர்களுக்கு தேவையான கல்வி சார்ந்த தகவலை கொண்டு சேர்க்க முடிகிறது. மாணவர்களின் மனதிலும் பதிந்துவிடுகிறது. இதன் எதிரொலியாக, நாளிதழ்களை வாசிக் கும் பழக்கம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது. உணவு இடைவேளை நேரத்தையும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக செலவிடுகிறேன்.
இந்த தொகுப்புகள் மூலமாக ஒற்றை மதிப்பெண் (one word answer) கேள்வி பதிலும் தயாரித்து, மாண வர்களுக்கு கற்பித்து வருகிறேன். இதனால், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் தெளிவான ஆற்றலை மாணவர்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களும் எடுத்துரைத்து வருகிறேன். இந்து தமிழ் திசையின் தொகுப்புகள், மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் மட்டுமின்றி, பயிற்சி முகாமில் ஆசிரியர்களை வழி நடத்தவும் உதவுகிறது. இந்து தமிழ் திசை என்பது அறிவு களஞ்சியம்” என்றார்.
இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறும்போது, “நாங்கள், நன்றாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என எங்களது ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பெரிதும் முயற்சி செய்து வருகிறார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் உள்ள தகவல்களை பாட வாரியாக தொகுத்து கற்பித்து வருகிறார். ஒவ்வொரு தகவலையும் தெரிவித்து, அதற்கான விளக்கத்தை எளிமையான வழியில் கூறுவதால், எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது, எங்களது ஆசிரியரை போன்று, நாளிதழ்களில் உள்ள தகவலை திரட்டுகிறோம். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும்போது, எங்களது படைப்புகள் குறித்து மன உறுதியுடன் எடுத்துரைக்கிறோம். இதே மன உறுதியுடன் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வோம்” என்றனர்.