‘ஆப்பிள்’ நிறுவனம், இனி திருடு போனதாகவோ காணாமல் போனதாகவோ ஜி.எஸ்.எம்.ஏ.,வில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐபோன்களை, பழுது நீக்கி தரப்போவதில்லை என முடிவு செய்துள்ளது.இதனால், ஜி.எஸ்.எம்.ஏ., சாதன பதிவில் பதிவாகி இருக்கும், தொலைந்துபோன அல்லது, திருடு போன ஐபோன்களை இனி பழுது நீக்க முடியாது.பொதுவாக, நம் சாதனங்கள் திருடு போனாலோ அல்லது, தொலைந்து போனாலோ, தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்துக்கு தெரிவிப்போம்.
அவர்கள் அந்த சாதனத்தின் ஐ.எம்.இ.ஐ., தகவலை ஜி.எஸ்.எம்.ஏ., உடன் பகிர்ந்து கொள்வர். பிற தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், இந்த தகவலை பெற்றுக்கொள்ளும். இதையடுத்து, இந்த சாதனங்களை, பிற நாடுகளில் பயன்படுத்த முடியாது.இனி, ஒரு ஐபோன் இந்த பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அதை, ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவை மையத்தில் பழுது நீக்க முடியாமல் போய்விடும்.
பதிவேட்டில் பதிவாகி இருக்கும் சாதனங்கள் வரும்பட்சத்தில், அவற்றை பழுது நீக்கி தரமுடியாது என மறுத்துவிடுமாறு, சேவை மையங்களுக்கு, ஆப்பிள் தெரிவித்துள்ளது.இதன் வாயிலாக, திருட்டு ஐபோன்கள் விற்கப்படுவதை தடுக்க, ஆப்பிள் முயற்சிக்கிறது.ஒருவேளை, திருடு போய் அல்லது தொலைந்துபோய் திரும்ப கிடைத்துவிட்டால், அந்த போனை வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து, பழுது நீக்கிக் கொள்ள முடியும்.
Advertisement