கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் முடிவுகளே இந்த நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதுடன், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும், ஆனால் ராஜினாமா கடித்தை அதிபர் ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இந்த தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல, என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோல் முன்னாள் மந்திரி விமல் வீரவன்சாவும் அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான திட்டத்தை அதிபரிடம் முன்வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்… இலங்கை மக்களின் பசியை போக்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பியது இந்தியா