இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது.
தென்னிந்திய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த சில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட 40 ஆயிரம் டன் டீசல் இலங்கையை சென்றடைந்துள்ளது.
இது குறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணராவ் கூறியதாவது:-
இலங்கைக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும். இதர நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு கொண்டு செல்ல பல வாரங்கள் தேவைப்படும். இந்தியாவில் இருந்து சில நாட்களில் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும்.
முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… கப்பல் மூலம் இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு சென்றது