தனது உடல் நலம் குறித்து விசாரித்த ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அன்புநிறைந்த உறவுகளுக்கு வணக்கம்!
பணிச்சுமை, அலைச்சல், உணவருந்தாமை ஆகியவற்றாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினாலும் நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின் இடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எனக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில், அச்சோர்விலிருந்தும், மயக்க நிலையிலிருந்தும் முழுமையாக விடுபட்டுவிட்டாலும், என் மீது பேரன்பும், பெரும் அக்கறையும், பெருத்த நம்பிக்கையும் கொண்ட உலகம் முழுவதும் வாழும் என்னுயிர் தமிழ்ச்சொந்தங்கள், என்னுடைய உடன்பிறந்தார்கள், எனது உயிர்க்கினிய எனது தம்பி, தங்கைகள், பாசத்திற்குரியப் பெற்றோர்கள் என யாவரும் பெரும் கவலையடைந்து, பதட்டம் அடைந்ததையும், மனம்வருந்தி துயருற்றதையும் நன்றாக அறிவேன்.
தற்போது முழுமையாக மீண்டு வந்து, முழு உடல்நலத்தையும் பெற்று வந்துவிட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப் பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன்.
மேலும், எனது உடல்நலம் குறித்து அக்கறையோடு நலம் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாசு அவர்களுக்கும், பாஜகவின் மூத்தத்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கும், மதிப்புக்குரிய ஐயா மதுரை ஆதீனம் அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.