ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரியவகை ரசாயன பொருட்கள் அறிமுகம்!

புதுடெல்லி,
ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரியவகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்கூர் அறிமுகப்படுத்தினார்.
தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் (என்டிடிஎல்) சாதனையாக, ஆறு புதிய வகை மேற்கோள் பொருட்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஊக்கமருந்து சோதனை ஆயவகங்களுக்கு தேவையான தூய்மையான ரசாயனமாக இது உள்ளது. 

கவுகாத்தியில் உள்ள  ‘தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த ஆறு பொருட்களை  ‘தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் (என்டிடிஎல்)’ தயாரித்துள்ளது.
இதன்மூலம், இந்த வகை வேதிப்பொருட்களை உருவாக்கியுள்ள  சில ஆய்வகங்களில் ஒன்றாக என்டிடிஎல் திகழ்கிறது.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், என்டிடிஎல்-ன் 15-வது நிர்வாக குழு கூட்டத்தில், விளையாட்டுத் துறை செயலர்  சுஜாதா சதுர்வேதி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ரசாயனப் பொருட்களை அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில், இந்த சாதனை பற்றி பேசிய  தாக்கூர்,  “இந்த மூன்று நிறுவனங்களின் விஞ்ஞானிகளை நான் பாராட்டுகிறேன். இடையறாமல் பாடுபட்டு அவர்கள் இந்த பொருட்களை உருவாக்கியுள்ளனர். 
இது பிரதமர்  நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை நோக்கிய சாதனையாகும். வெகு விரைவில், இந்தப் பொருட்களை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்’’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.