அதிமுக ஒவ்வொரு காலத்திலும் பல போராட்டங்களை கண்டு மீண்டு எழுந்து வந்த கட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டபின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
காவல் நிலையத்தில் நாள்தோறும் வந்து கையெழுத்து இடுவது பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவது போல இருக்கிறது. பள்ளிக்கு வந்து கையெழுத்திட்டுள்ளேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கு வந்து கையெழுத்திடுவது சந்தோஷமாகத் தான் உள்ளது.
இந்த விடியா அரசை பொறுத்தவரையில் உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று, அவர் அதிமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம், சிறையில் போட்டால் அடங்கிவிடுவார்கள், இனிமேல் பேசமாட்டார்கள் என்று நினைத்தார்.
அவருக்கு வரலாறு தெரியவில்லை. 1972 லிருந்து அடக்குமுறையைச் சந்தித்த கட்சிதான் அதிமுக. இவருடைய அப்பா காலத்தில் புரட்சித்தலைவர் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டு அதனை எல்லாம் சமாளித்து மிகப்பெரிய மாபெறும் இயக்கமாக உருவெடுத்தது. அதுபோல அம்மா காலத்திலேயும் ஏகப்பட்ட வழக்குகள் எல்லாம் போட்டு, பெரிய அளவுக்குக் கட்சி எழுச்சியாகி ஆட்சியைப் பிடித்தது.
எனவே அடக்குமுறை என்பது ஒரு தீர்வல்ல. ஜனநாயகத்தில் அடக்குமுறையை ஒரு ஆட்சி கையாண்டால் அது வீழ்ச்சியை நோக்கிதான் பயணம் செய்யும்.அதற்குக் கடந்த காலங்களிலே உதாரணங்கள் எல்லாம் உள்ளது.
திருச்சியில் கழகம் பெரிய எழுச்சியாக இருக்கிறது. நான் சென்ற பிறகு மிகப்பெரிய எழுச்சியாக ஆகிவிட்டது. என்னால் என்றும் மறக்கமுடியாது. திருச்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. சென்னையிலும் கட்சியின் எழுச்சியை அவர்கள் காண்பிக்கிறார்கள்.
எனவே இந்த பள்ளிக்கு வரும் நிகழ்வு என்பது தினந்தோறும் கட்சிக்கு எழுச்சி உண்டாக்குவதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக ராணுவ கட்டுபாடுமிக்க இயக்கம் என்றும், அடாவடி, அத்துமீறல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள் என்றும், திமுக ஆட்சியில் பெயருக்கு தற்காலிக நீக்கம் செய்கிறார்கள் என்றும், காவல்துறையை அசிங்கப்படுத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை என்றால் காவல்துறை எப்படி தன்னுடைய கடமையைச் செய்யும் என்றும் கேள்வி எழுபினார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 300 நாட்கள் ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டும். எங்கெங்கு எல்லாம் அவர் கட்சியினர் பாதிப்பை ஏற்படுத்தினார்களே அவர்கள் வீட்டுக்குச் சென்று நேரடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இதுதான் பெருந்தன்மையான விஷயம். இதனைச் செய்வாரா ஸ்டாலின் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுபினார்.