ஓவியத்தால் வறுமையை வென்ற சென்னை இளைஞர்!

சென்னையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் பாண்டிபஜாரில் கீதா கபே அருகில் சாலையோரம் நடைப்பாதையில் அமர்ந்து ஒரு மாலை நேரம் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் இளைஞர்.

அவரிடம் சென்று பேசினோம். அவரது பெயர் எம். சுரேந்தர். இறுதி ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.

கடந்த 2 வாரங்களாக இங்கு அமர்ந்து அவர் சாலையில் செல்பவர்கள் கேட்டால் அவர்களின் ஓவியத்தை வரைந்து தருகிறார்.

ஜாஃபர்கான்பேட்டைச் சேர்ந்த இவர், பிரபலங்களான சூப்பர் ஸ்டான் ரஜினிகாந்த், குத்துச்சண்டை வீரர் தி ராக் ஆகியோரின் ஓவியங்களை வரைந்து சாலையில் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள Avichi கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.

அவர் நம்மிடம் கூறியதாவது:

நான் நேர்மையாக இருக்கிறேன். ஆனால், எனக்குள் ஒரு பயம். போலீஸார் ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது கடைக்காரர்கள் என்னை இங்கு அமர விடாமல் செய்து விடுவார்களோ என்று எண்ணியிருக்கிறேன்.

நல்லவேளையாக அதுபோல் எதுவும் இதுவரை நடக்கவில்லை. நான் இங்கே அமர்ந்து பொதுமக்களுடன் உரையாடி அவர்களின் கருத்துக்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறேன். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். எனது தந்தை தினக் கூலி. பல நாட்கள் பட்டினியாக இருந்திருக்கிறோம்.

சாலையில் படுத்து உறங்கியிருக்கிறோம். ஆனால் நான் படிப்பை கைவிட்டதில்லை. எனது படிப்பை விடாமல் எனது தந்தை பார்த்துக் கொண்டார். 10ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு 492 எடுத்தேன்.
12ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்ணுக்கு 523 எடுத்தேன்.

பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளை எடுக்குமாறு என்னை வலியுறுத்தினர். ஆனால், நான் விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்தேன். ஓவியக் கலையை விட்டுச் செல்ல எனக்கு விருப்பம் இல்லை.
நான் இளம் வயதிலிருந்து ஓவியம் வரைந்து வருகிறேன். சாப்பிடுவது, தூங்குவது போன்றதுதான் ஓவியம் வரைவதும். எனது வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது ஓவியம்.

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்.. ஜப்பான் நிறுவனம் ரூ. 4,710 கோடி நிதியுதவி!

இந்தியா முழுவதும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறேன். மிகப் பெரிய நிறுவனங்களிலும் எனக்கு பணிபுரிய வாய்ப்பு வந்தது. ஆனால், கல்வியை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து படித்து வருகிறேன்.

இதுபோன்ற ஓவியங்களை வரைவதன் மூலம் என்னால் அதிக பணம் ஈட்ட முடிகிறது.
பல கஷ்ட காலங்களில் எனக்கு உதவிய பக்கத்து வீட்டு பாட்டிக்கு நான் ஒரு ஜோடி செருப்பும், பழங்களும் வாங்கிக் கொடுத்தேன். அது என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும்.

நான் யாரிடம் இருந்தும் ஓவியக் கலையை கற்கவில்லை. பள்ளியில் படித்தபோது எனது ஆசிரியர் அடிப்படையை மட்டும் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு நானே எப்படி வரைய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். என்னால் பென்சில் ஓவியத்தை 10 நிமிடங்களில் வரைய முடியும்.

வண்ண ஓவியத்தை 15 முதல் 20 நிமிடங்களில் வரைய முடியும். இதை நான் இன்னும் வேகமாக செய்து முடிக்க விரும்புகிறேன். கருப்பு-வெள்ளை ஓவியத்துக்கு ரூ.150 கட்டணமாகப் பெறுகிறேன். அளவைப் பொறுத்தும் வண்ணங்களைப் பொறுத்தம் ரூ.1000 வரை வசூலிக்கிறேன்.

இப்படி சம்பாதிப்பதை வைத்து நான் எனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறேன். ஷார்ட் ஃபிலிம்ஸில் எனது பங்களிப்பை வழங்குகிறேன். டைட்டில் டிசைன் செய்ய கூப்பிட்டால் அதையும் செய்து தருகிறேன். சினிமா எனக்கு மிகவும் பிடித்த துறை.

எனது தந்தை திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவரது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இயக்குநராக உருவாக முடியவில்லை. எனது தந்தையின் கனவை நான் நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் என்கிறார் சுரேந்தர்.

இவரிடம் வாட்ஸ்அப்பில் புகைப்படத்தை அனுப்பி வரையச் சொல்லிவிட்டு, ஷாப்பிங் முடிந்ததும் அவற்றை பெற்றுச் செல்கிறார் வாடிக்கையாளர்கள்.

Written by Janardhan Koushik 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.