பெங்களூரு : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கர்நாடகாவுக்கு வருகை தந்தும், அவரை முன்னாள் அமைச்சர் ஜமிர் அகமது கான் சந்திக்கவில்லை. கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. காங்கிரசை விட்டு விலக, ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ம.ஜ.த.,விலிருந்த ஜமிர் அகமது கான், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமாக திகழ்ந்தார். இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதால், ம.ஜ.த.,விலிருந்து விலகிய ஜமிர், காங்கிரசில் இணைந்தார்.கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்தார். அவ்வப்போது சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசி, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் கோபத்துக்கும் ஆளானார்.
இந்நிலையில் காங்கிரசில், தன்னை ஓரம் கட்டுவதாக, ஜமிர் கோபத்தில் இருக்கிறார். சித்தகங்கா மடத்தின், சிவகுமார சுவாமிகளின் குரு வந்தனா நிகழ்ச்சியில் பங்கேற்க, ராகுல் கர்நாடகாவுக்கு வந்திருந்தார். அவரை ஜமிர் சந்திக்கவில்லை. தலைவர்களுடன் நடந்த கூட்டத்துக்கும் ஆஜராகவில்லை.காங்கிரஸ் தன்னை ஓரம் கட்டுகிறது. டில்லியில் ராகுல் தலைமையில் கூட்டம் நடந்த போது, தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என, தனக்கு நெருக்கமானவர்களிடம்் கூறி வருந்திஉள்ளார்.
இவர் காங்கிரசிலிருந்து விலக ஆலோசிக்கிறார். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுடனும், பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.மற்றொரு பக்கம், பாகல்கோட் காங்கிரசிலும் அதிருப்தி தீவிரமடைந்துள்ளது. சட்டமேலவை டிக்கெட் கை நழுவியதால், மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீலும் கூட, அதிருப்தியில் உள்ளார். ராகுலையும் சந்திக்கவில்லை. பா.ஜ., தலைவர்களுடன், தொடர்பிலுள்ள எஸ்.ஆர்.பாட்டீல், அமைச்சர் கோவிந்த் கார்ஜோலுடன், ஆலோசனை நடத்தியுள்ளார்.சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரசில் கட்சித்தாவல் துவங்கியதாக கூறப்படுகிறது.
Advertisement