பாகிஸ்தானின் லாகூரில் 1952-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி பிறந்த இம்ரான் கான் ஆக்ஸ்போர்டில் உள்ள கெபிள் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இம்ரான் கான், தனது 16 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 1970-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக உயர்ந்தார். 1981-ல் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி கடந்த 1992-ம் ஆண்டு மட்டும் தான் உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் இம்ரான் கான்.
உலகக்கோப்பையை வென்ற 6 மாதங்களில் சர்வதேச போட்டிகளில் இருந்து இம்ரான் கான் ஓய்வு பெற்றார். 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 3,807 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சதங்கள் மற்றும் 18 அரைச்சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 136 ஆகும். ஒரு பந்துவீச்சாளராக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 362 விக்கெட்டுகளை எடுத்தார். 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,709 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் “விரைவில்” பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான் புற்றுநோயால் இறந்த தனது தாயின் நினைவாக அவரது பெயரிலேயே ஷௌகத் கான் புற்றுநோய் மருத்துவமனையைத் திறந்தார். சர்வதேச அளவில் இலவச புற்றுநோய் சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை பாராட்டப்படுகிறது. மிகப்பெரும் பணக்காரரான ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித்தின் மகள் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை இம்ரான் கான் 1995-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. 2004-ம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த இம்ரான் கான், பத்திரிகையாளரான ரெஹாம் கானை 2015-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையும் சிறிது காலமே நீடித்தது. பின்னர் 2018-ம் ஆண்டு புஷ்ரா பீவி என்பவரை இம்ரான் கான் 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.
1996-ம் ஆண்டு தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான், 1997-ம் ஆண்டு தான் போட்டியிட்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர், 2002-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், 2007-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரப் மீண்டும் பாகிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பலமிக்க சக்தியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றி பெற்ற அவர் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆகஸ்ட் 18, 2018 அன்று பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார்.
தற்போது கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை எந்த பிரதமரும் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. அந்த பட்டியலில் விதிவிலக்கின்றி இம்ரான் கானும் இணைந்துள்ளார்.