உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. ஒரு மாதத்துக்கு மேல் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை.
குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. அந்த நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் வான்வழி தாக்கு தல்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டன.
மேலும் கீவ் நகரை நோக்கி 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவ படை அணிவகுத்து வந்தது. இதனால் கீவ் நகரத்தில் ரஷிய படைகள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர்.
கீவ் புறநகர் பகுதிகளை தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்த ரஷியாவால் தலைநகருக்குள் நுழைய முடியவில்லை. ரஷிய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து பின் வாங்க செய்தனர். மேலும் கீவ் புறநகரில் சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது.
இதற்கிடயே கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களை சுற்றி இருக்கும் தனது படைகளை குறைப்பதாக ரஷியா அறிவித்தது.
உக்ரைன் தலைநகருக்கு அருகே உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய படை பின்வாங்கின. அங்கிருந்து ரஷிய வீரர்கள் வெளியேறினார்கள்.
இதன் மூலம் கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் நாட்டு துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறும்போது, ‘‘இர்பின், புச்சா, கோஸ்டோமல் மற்றும் முமுகிவ் பகுதியும் ரஷிய படையெடுப்பினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். இந்த நகரங்கள் கீவ்வின் வடமேற்கே அமைந்துள்ளன.
கீவ்வை சுற்றியுள்ள நகர்ப்பகுதியில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து அப்பகுதிகளை உக்ரைன் ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ரஷிய படைகள் வெளியேறிதால் கீவ் நகர்ப் பகுதிகளில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் உக்ரைன் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘‘டான்பாஸ் பிராந்தியம் மற்றும் உக்ரைனின் தெற்கே இரண்டையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். நமது இலக்கு என்ன? நமது சுதந்திரம், நமது நிலம் மற்றும் நமது மக்களை பாதுகாப்பது’’ என்றார்.
இதையும் படியுங்கள்… ரஷியாவின் எண்ணெய் கிடங்கு மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை- உக்ரைன் மறுப்பு