கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகரிக்கும் வெப்பநிலையால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாலை முதல் அதிகாலை வரை மட்டுமே குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது.
தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருவதால் வாரவிடுமுறை நாட்களில் கோடைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலாபணிகள் செல்வது அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கம்போல் இந்தவாரமும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சுற்றுலாபயணிகளுக்கு இங்குநிலவும் சீதோஷ்ணநிலை பாதி ஏமாற்றத்தை தான் தந்துவருகிறது. காலையில் சூரியன் உதிக்கத்துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் தொடர்கிறது. தரைப்பகுதியில் இருக்கும் அளவிற்கு அதிகமாக வெயிலின் தாக்கம் இல்லாதபோதும், கொடைக்கானலில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கிறது. இதனால் அவ்வப்போது மலைப்பகுதிகளில் காய்ந்த புற்களில் தீ ஏற்பட்டு காட்டுத்தீ பரவுவதும் தொடர்கிறது.
பகல் 3 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. சில நாட்களில் மாலையில் சாரல் மழையும் பெய்கிறது. இரவில் வெப்பம் குறைந்து 14 டிகிரி செல்சியஸாக உள்ளது.
காலையில் பிரையண்ட்பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் சதுக்கம், பைன்பாரஸ்ட், தூண்பாறை ஆகியவற்றை கண்டு ரசிக்கும் சுற்றுலாபயணிகள் மாலையில் இதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையை அனுபவிக்கின்றனர். ஒரு நாள் சுற்றுலாவாக கொடைக்கானல் சென்றுவருபவர்களுக்கு ஊர்திரும்பும்போது சிலமணிநேரம் மட்டுமே இதமான காலநிலையை அனுபவிக்க முடிந்தாலும், அங்கு தங்குபவர்கள் முழுமையாக கொடைக்கானலின் குளுமையை
அனுபவிக்கின்றனர்.