பெங்களூரு : கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பெங்களூரு ரூரலில் சிக்குன் குனியா அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பெங்களூரு ரூரலில் கொரோனா தீவிரமாக இருந்த போது மக்கள் துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பின்பற்றினர். இதன் பயனாக தொற்று குறைந்ததுடன், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பாதிக்கவில்லை.தொற்று குறைந்துள்ளதால், மக்களிடம் விழிப்புணர்வு மாயமாகி விட்டது. முக கவசம் அணியாமல், சமூக விலகல் இல்லாமல் மக்கள் நடமாடுகின்றனர். இதன் விளைவாக பெங்களூரு ரூரலில், டெங்கு, சிக்குன்குனியா பரவ துவங்கியுள்ளது.
குறிப்பாக சிக்குன் குனியா ஏற்பட்டு, மருத்துவமனையில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:சிக்குன் குனியா பரவுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக நாட்கள் சேகரித்து வைத்த தண்ணீரை பயன்படுத்துவதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சிக்குன் குனியா விஷயத்தில், மக்கள் அலட்சியமாக இருந்தால், மருத்துவமனையில் சேர வேண்டி வரும்.கிராமப்பகுதிகளில், 10 — 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், தண்ணீரை சேகரித்து வைக்கும் வழக்கம் உள்ளது. டிரம்கள், தொட்டிகள், பாத்திரங்கள், குடங்களில் தண்ணீர் நிரப்புவர். வாரக்கணக்கில் ஒரே இடத்தில் சேகரித்து வைப்பதால், தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும்.
இதை பயன்படுதுவதால், டெங்கு, சிக்குன் குனியா பரவும்.ஹொஸ்கோட்டின் தொட்ட அரளிகரே கிராமத்தில் ஒருவருக்கு சிக்குன் குனியா ஏற்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் உத்தரவுபடி ஆஷா ஊழியர்கள் அந்த கிராமத்துக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement