கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழக அரசு, “டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவித சலுகையும் உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடாது” எனக் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் பொய்தகவல்களை தெரிவிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது.