தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் 5 நாள் பயணமாக துபாய் சென்று, அங்குள்ள வர்த்தக முதலீட்டார்களைச் சந்தித்தார். பின்னர் தமிழகம் திரும்பிவிட்டு 3 நாள் பயணமாக டெல்லி சென்ற ஸ்டாலின், முதல்நாளில் பிரதமர் மோடியைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் விவகாரம், கச்சத்தீவு விவகாரம் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, GST நிலவைத்தொகை உட்பட தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.21 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். பின்னர், டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தி.மு.க அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த ஸ்டாலின், தமிழகம் திரும்பினார்.
இந்த நிலையில், சென்னையில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஸ்டாலின், தனது டெல்லி பயணம் குறித்து உலாவிய விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.
அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், “அண்மையில் டெல்லிக்கு மூன்று நாள் பயணமாக சென்று, நமது மாநிலத்திற்கு தேவைப்பெறக்கூடிய பிரச்னைகளையெல்லாம், பிரதமரிடத்திலே, அதற்குரிய அமைச்சர்களிடத்திலே அந்த கோரிக்கைகளையெல்லாம் எடுத்துவைத்து, உரிமைக்கு குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க, அதை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்று சொன்னால், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து என்னை காப்பாற்றிக்கொள்வதற்காகத் தான் நான் போனேன் என்று சொல்கிறார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன், அங்க போய் யாருடைய கால்களிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழகத்தின் உரிமைக்காக தான் போனேனே தவிர வேறல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல… பதவியேற்றபோது கூட, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றுதான் சொல்லியிருக்கிறேன். கலைஞருடைய மகன் என்றைக்கும் தமிழ் நாட்டிற்காக உழைப்பான்” என்றார்.